Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அமெரிக்க இடைத் தேர்தலில் ஒபாமா அரசுக்கு பின்னடைவு

அமெரிக்காவில் இடம்பெற்ற இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. அமெரிக்க செனட் சபையை கட்டுப்படுத்த குடியரசு கட்சி போதுமான பெரும்பான்மையை வென்றுள்ளது.
கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் அயோவாவில் குடியரசு

கட்சி குறைந்தது ஆறு செனட் ஆசனங்களை வென்றதன் மூலம் 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் குறைந்த பெரும்பான்மையான 51 ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. அத்துடன் அது மேலும் ஆசனங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது. இந்த வெற்றிகளின் மூலம் அந்த கட்சி 435 இடங்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையிலேயே குடியரசு கட்சி செனட் சபையில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டுள்ளது.

அரசு மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை கொள்ளவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக குடியரசு கட்சி செனட்டர் மிச் மக்கோனல் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஒபாமாவின் இரண்டாவது நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் இடம்பெறுவதால் இடைத்தேர்தல் என அழைக்கப்படும் இந்த தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

அத்துடன் 38 மாநிலங்களுக்கான ஆளுநர்; பதவிகள், 46 மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தலும் நடந்தது. தேர்தல் பிரசாரத்தில் குடியரசு கட்சி ஒபாமா ஆட்சியின் அதிருப்தியை முன்வைத்து பிரசாரங்களை தீவிரப்படுத்தி இருந்ததோடு ஜனநாயக கட்சி தனது ஜனாதிபதி மீதான கருத்துக் கணிப்பாக இந்த தேர்தலை வர்ணித்திருந்தது. வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதும் நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி குடியரசு கட்சி செனட் அவையில் பெரும்பான்மையை பெற்றிருப்பது உறுதியானது. அத்துடன் அது மேலும் ஆசனங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு அவைகளிலும் குடியரசு கட்சி முதல்முறையாக பெரும்பான்மையை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியின் வெற்றியின் மூலம் ஒபாமா அரசுக்கு அதிகார சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடியரசு கட்சி ஒத்துழைத்தாலேயே ஒபாமா தனது இறுதி இரண்டு ஆண்டு பதவிக்கால திட்டத்தையும் சுமுகமாக முன்னெடுக்க முடியுமான சூழல் ஏற்பட்டுள்ளது. செனட் அவையில் பெரும்பான்மை இருப்பதால் குடியரசு கட்சிக்கு புதிய மத்திய நீதிமன்ற நீதிபதி, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை நியமிப்பதில் சவால் விடுக்க முடியும். எனவே ஒபாமா தனது எஞ்சிய இரு ஆண்டு பதவிக்காலத்தையும் குறைந்த அதிகாரங்களுடனேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒபாமா அரசின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள்கையே அது பின்னடைவை சந்திக்க காரணம் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments