Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இடைக்கால ஜனாதிபதியின் தேர்தல் அட்டவணை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பால் நிராகரிப்பு


நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

எகிப்தில் இராணுவ புரட்சி மூலம் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு புதிய தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. எனினும் இதனை நிராகரித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.கெய்ரோவின் பாதுகாப்பு தலைமையகத்திற்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்
சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு தழுவிய தியாகிகளின் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படும் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி அட்லி மன்சூரின் இடைக்கால அரசு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு மணித்தியாலயத்திற்குள் இடைக்கால ஜனாதிபதி புதிய பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அட்டவணையை நேற்று வெளியிட்டார்.
இதன்படி பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சியின் ஆட்சியில் மக்கள் அங்கீகாரத்தை பெற்ற அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர 5 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பின் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதியின் 33 கட்டுரைகள் கொண்ட புதிய ஆணையில் கூறப்பட்டுள்ளது.
எகிப்தில் புதிய ஜனநாயக அரசை அமைக்கும் செயற்பாடுகளுக்கு 210 நாட்களுக்கு குறைவான காலமே எடுக்கும் என அந்த ஆணையில் விபரிக்கப்பட்டுள்ளது. இதன்படி எகிப்தில் புதிய பாராளுமன்ற தேர்தல் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் எதிர்பார்க்க முடியும்.
எனினும் இந்த தேர்தல் அட்டவணையை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நிராகரித்துள்ளது. “இராணுவ சதிகாரர்களால் நியமிக்கப்பட்ட ஒருவரால் பிறப்பிக்கப்படும் ஆணை” என விபரித்திருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் பிரிவின் துணைத் தலைவர் இஸ்லாம் அல் எரியான், “இது நாட்டை மேலும் பின்னோக்கிச் செலுத்தும்” என கூறியுள்ளார்.
அதேபோன்று இந்த ஆணை சட்டவிரோதமானது மற்றும் முறையற்றது என சகோதரத்துவ அரசியல் பிரிவு சட்ட ஆலோசகர் அஹ்மத் அல் பரகாஹ் கூறியுள்ளார்.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட முர்சி ஆதரவாளர்களின் உடல்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. எனினும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வட கிழக்கு கெய்ரோவின் ரபா அல் அத்வியா பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ந்தும் முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
“இந்த ஜனாதிபதிக்கு யாரும் வாக்களிக்கவில்லை” என கூறிய மேற்படி பகுதியில் முகாமிட்டிருக்கும் முர்சி ஆதரவாளர் அஷ்ரப் அவாத், “அவர் பதவி ஏற்றது சட்டபூர்வமானதல்ல.
எனவே, அவரது முடிவுகளை மக்களால் ஏற்க முடியாது” என்றார். அங்கிருக்கும் மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரான ஹம்தி அல் சைத் கூறும்போது “முர்சி தொடர்ந்து ஜனாதிபதியாகவே இருக்கிறார். நேற்று (திங்கட்கிழமை) கொல்லப்பட்டவர்கள் போல் ஒரு தியாகியாகும் வரை நான் அவருக்கு அளித்த வாக்கை பாதுகாப்பேன்” என்றார்.
அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முர்சி ஆதரவாளர்கள் மீது நேற்று முன்தினம் அதிகாலை (சுபஹ்) தொழுகைக்காக ஒன்று கூடியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும் தீவிரவாதிகள் தமது பாதுகாப்பு அரணை முறியடிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதோடு 435 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டோரின் பெரும்பாலானோரது தலையிலேயே துப்பாக்கி ரவை பாய்ந்துள்ளது.
எகிப்தில் முதல் முறை ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சியை கடந்த புதன்கிழமை இராணுவம் பதவி கவிழ்த்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முர்சி ஆதரவாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் எகிப்து இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டை கடை பிடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எகிப்து இராணுவத்திற்கான ஆண்டுதோறும் வழங்கும் உதவியை நிறுத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
இதனிடையே சுன்னி முஸ்லிம்களின் உயரிய அமைப்பான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவர் அஹமத் அல் தய்யிப் சிவில் யுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் வன்முறைகள் அனைத்து முடிவுக்கு வரும் வரை விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட அறிவிப்பை எகிப்து பாதுகாப்பு படைகளின் தளபதி தொலைக்காட்சியினூடே அறிவிக்கும்போது இராணுவத்திற்கு ஆதரவாக அஹமத் அல் தய்யிபும் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் எகிப்தின் இரண்டாவது மிகப் பெரிய அரசியல் கட்சியான சலபிக்கஸின் அந்நூர் கட்சி முன்னர் முர்சியின் பதவி கவிழ்ப்பை ஆதரித்திருந்தது. ஆனால் அது இடைக்கால ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்துள்ளது. முர்சி ஆதரவாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை ‘படுகொலை’ என அந்த கட்சி கூறியுள்ளது.

Post a Comment

0 Comments