Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மண்சரிவில் சிக்கியோரின் நிலை என்ன? நான்காம் நாளில் எவரும் மீட்கப்படவில்லை!

உறவுகளை இழந்து தவிப்போர் மிகவும் கவலையுடன் அலைந்து திரியும் அவலம்
பதுளை, கொஸ்லாந்தை - மீரியபெத்தைத் தோட்டத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பாரிய மண் சரிவில் சிக்கி காணாமற் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் எவரும் மீட்கப்படவில்லை. அத்துடன் இறந்தோரின் சடலங்களும் கிடைக்கவில்லை. இதனால் மண்சரிவு அனர்த்தத்தில் உறவுகளை இழந்து தவிப்போர் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற
ஆதங்கத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மிகவும் கவலையுடன் அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றனர்.

காணாமல் போனவர்களின் கதி என்னவென்று தெரியாமையால் மக்கள் பெரும் சோகத்துடனேயே இருக்கின்றனர். இதுவரை 10 பேரின் சடலங்களே மண்சரிவு இடம்பெற்ற மீரியபெத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 3 சடலங்கள் முழுமையாகவும், 7 சடலங்கள் சிதைவடைந்த நிலையிலும் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மண்சரிவு காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் 100 பேர் என்று ஒரு சாராரும், 200 பேர் என்று இன்னொரு சாராரும். 300 இற்கும் 400 இற்கும் இடையில் என்று பிறிதொரு சாராரும் கூறி வருகின்றனர். எனினும் மண்சரிவு இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் 400 இற்கு மேற்பட்டோர் வசித்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மண்சரிவு இடம்பெற்ற பகுதியில் தற்போது இரண்டு பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் பணிகளை முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். மீட்புப் பணிகளைப் பொறுத்தமட்டில் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. மண்ணில் புதையுண்டு போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் கண்ணீர்மல்க மீட்புப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மீரியபெத்தைத் தோட்டத்தில் மண்ணில் புதையுண்டுபோன லயன் குடியிருப்புகளுக்கு மேலே 35 அடி வரை மண் நிறைந்துள்ளதால் மீட்புப் பணியாளர்கள் மண்ணை அகற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments