நாட்டின் பல பாகங்களிலும் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் எச்சரிக்கை தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தினால் விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எல்ல பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் நமுனுகுல பிங்கராவ தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் 15 குடும்பங்களை
சேர்ந்த சுமார் 60 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தகல தோட்டத்திலுள்ள தொழிற்சாலை பிரிவை சேர்ந்த 150 பேர் கலப்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்திலும் நிவ்பர்க் பகுதியை சேர்ந்தவர்கள் அப்பகுதி பாடசாலையொன்றிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பாராளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்கு பண்டார மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி மற்றும் பண்டாரவளை நகரபிதா சமிந்த விஜேசிரி ஆகியோரும் ஜனாதிபதியின் இணைப்பு பணிப்பாளர் அரவிந்தகுமாரும் நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நிவாரண ஏற்பாடுகளுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனவரல்ல சீ.வி.ஈ மற்றும் சீ.வி 2 பிரிவுகளில் நிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெடிப்புகள் காரணமாக அப்பகுதியிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளிலுள்ள மக்கள் கனவரல்ல தமிழ் வித்தியாலயம் கனவரல்ல இல 3 தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக கனவரல்ல இல 3 தமிழ் வித்தியாலயத்திற்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
பதுளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளம் அல்பின் கிராம்ஸ் லேண்ட் (செல்வந்த) பிரிவிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பதுளை பசறை வீதி பசறை லுணுகலை வீதி வெலிமடை அட்டாம்பிட்டிய வீதி ஹாலிஎல கந்தேகதெர வீதி மற்றும் பண்டாரவளை அப்புத்தளை வீதி பூனாகலை கொப்பலாந்தை வீதி என்பவற்றில் பயணங்களை அவதானமாக மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments