Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கை பால்மா களஞ்சியங்களில் இனிமேல் அதிரடி சோதனை

இலங்கையில் பால்மா விலையை அதிகரிக்க அனுமதி தருமாறு பால்மா நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அந்தக் கோரிக்கை பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
அதற்கிடையில், பால்மா நிறுவனங்கள் தங்களின் கையிருப்புகளை பதுக்கிவைக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருவதாக அதிகாரிகளிடம் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.அதனை முறியடிக்கும் முயற்சியாக, பால்மா நிறுவனங்கள் தங்களின் களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவாகார
அதிகாரசபையில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவை கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சு கொண்டுவந்துள்ளது.

இதற்கான வர்த்தமானி உத்தரவு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்ஷூக் தெரிவித்தார்.

´அனைத்து பால்மா கம்பனிகளின் களஞ்சியசாலைகளையும் நுகர்வோர் அதிகார சபையில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்பது முதல் தடவையாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது´ என்றார் ரூமி மர்ஷூக்.

இதன்படி, பால்மா நிறுவனங்களின் களஞ்சியசாலைகளுக்குள் நேரடியாகச் சென்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனை நடத்தமுடியும்.

´சில நாட்களுக்கு முன்னர் சில கம்பனிகள் தங்களின் பால்மா கையிருப்புகளை அநாவசியமான முறையில் பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்தது. எமது அதிகாரிகள் அப்படியான பதுக்கல்களை கைப்பற்றி நீதிமன்றத்தின் முன்னால் ஒப்படைத்துள்ளனர்´ என்றார் ரூமி மர்ஷூக்.

பால்மா கையிருப்பை பதுக்கி வைத்திருப்பதன் மூலம் திறந்த சந்தையில் பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன்மூலம் பின்னர் நல்ல விலைக்கு விற்பது தான் அப்படியான நிறுவனங்களின் நோக்கம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது.

பால்மா விலை உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூடிய விரைவில் முடிவு வெளியாகிவிடும் என்றும் அதிகாரசபை தெரிவித்தது.

பதுக்கிவைக்கப்பட்டிருந்த பால்மா கையிருப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்ஷூக் கூறினார்.

இலங்கைச் சந்தைகளில் ஏற்கனவே 810 ரூபாவுக்கு விற்கப்படும் ஒரு கிலோ பால் மாவுக்கு மட்டும் மேலும் 250 ரூபா அதிகரிப்பை நிறுவனங்கள் கோரியுள்ளன.

அதற்கு அனுமதி கிடைப்பதற்கு முன்னதாக நாடெங்கிலும் கடைகளில் பால் மா தட்டுப்பாடு தொடங்கிவிட்டதாக மக்கள் முறையிடுகின்றனர்.

சில கடைகளில் இப்போதே ஒருகிலோ பால்மா பாக்கெட் 1000 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், விலை உயர்வு கோரப்படாத 325 ரூபாவுக்கு இருந்த 400 கிராம் பாக்கெட் 410 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இலங்கையை பசும்பாலில் தன்னிறைவு அடையச் செய்யும் செயற்திட்டத்தை முன்னெடுத்துவருவதாக அரசாங்கம் பல ஆண்டுகளாக கூறிவருகின்றது. ஆனால், இன்னும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால் மாவிலேயே பெரும்பாலும் நாடு முழுவதும் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(பிபிசி) 

Post a Comment

0 Comments