மாகாணசபை தேர்தல் காலத்தில் அரசாங்கம் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தது மாத்திரமன்றி தேர்தல் சட்டங்களையும் மீறி தேர்தல் வன்முறைகளிலும் ஈடுபட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும் கட்சிக்காக உழைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராச்சி சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தேர்தலில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டு அரச அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவற்றை தடுத்து நிறுத்த ´தனது கை நீளமல்ல´ என தேர்தல்கள் ஆணையாளரே கூறி விட்டார். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இந்த நிலையின் கீழ் மக்கள் வாக்களித்தமை நாட்டின் ஜனநாயகம் சுதந்திரம் நியாயமான தேர்தல் முறை என்பவற்றை பாதுகாக்கவே என நாம் நினைக்கிறோம்.
அதனால் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பெறுமதியானது என நம்புகிறோம்.
ஜனநாயகத்தை பாதுகாத்து சுதந்திரமானதும் நீதியானதுமான சமூகத்தை உருவாக்க எமது கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்துடன் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
0 Comments