
தேர்தல் பிரசார காலகட்டத்தின் போதும், தேர்தல் அன்றும் நிலவிய அசாதாரண அரசியல் வன்முறை சூழலின் மத்தியில், ஒரு எதிர்கட்சியான எமக்கு கண்டியில் கிடைத்துள்ள வெற்றி ஒரு பெரும் வெற்றியாகும். படித்த பட்டதாரி இளைஞரான நமது மத்திய மாகாணசபையின் புதிய உறுப்பினர் வேலு குமார் நமது கட்சியின் கொள்கைவழி பயணத்தை தூய சிந்தனையுடன் இனி வருங்காலத்தில் கண்டி மாவட்டத்தில் முன்னெடுப்பார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகள் காரணமாக கண்டி மாவட்ட முடிவுகள் நேற்று இரவு தாமதமாகவே வெளியிடப்பட்டன.
தலைநகர தமிழ் மக்களின் தலைமை கட்சியாக மேல்மாகாண சபையில் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள நாம் மத்திய மாகண சபையிலும் கண்டி மாவட்ட பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளோம். கண்டி மாவட்டத்தில் எமது வெற்றி, ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு தேசிய கட்சி என்ற மகத்தான செய்தியை மீண்டும் நிரூபித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ராஜ்குமார், சந்திரகுமார் ஆகிய இருவரும் வெற்றி பெறவில்லை. நுவரெலிய மாவட்டத்தில், எமது கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய செல்வாக்கு சரிவு, தேர்தல் பிரசார காலகட்டத்தில் நிலவிய வன்முறை, அரசு வளங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை மற்றும் தேர்தல் பிரசார காலகட்டத்திலும், தேர்தல் அன்றும் தோட்ட தொழிலாளர் மத்தியில் மதுபானம் அரசியல் வாக்களிப்பின் ஒரு கருவியாக மிகப்பெரியளவில் பயன்படுத்தப்பட்டமை ஆகிய காரணங்கள் எங்களுக்கு எதிராக அமைந்து இருந்தன.
மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தை மீட்டு எடுப்பதில் இளைஞர் சமூகத்தின் துணையுடன் விழிப்புணர்வுகான ஒரு அறிவொளி இயக்கத்தை முன்னெடுக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். கண்டியில் மாவட்ட வெற்றியையும், நுவரெலியா மாவட்ட வெற்றி பெறாமையையும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் நான் சரிசமமாக எடுத்து கொள்கின்றேன். நமது மத்திய மாகாண தேர்தல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, வாக்களித்த அனைத்து உடன் பிறப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
0 Comments