Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

'அரசாங்கத்துடன் மு.காவிற்கு நல்ல உறவில்லை'

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசாங்கத்துடன் உள்ள உறவு நல்லதில்லை என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கண்டி, கல்ஹின்ன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை பலப்படுத்துவதற்காக தனித்துக் களமிறங்கியுள்ளதே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தவோ அரசாங்கத்தை பலயீனப்படுத்தவோ அல்ல. இந்த கட்சியை யாரும் பிளவுபடுத்த முடியாது. 
இந்த கட்சிக்குள் மாற்று தலைமையொன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட எடுத்த தீர்மானம் கட்சியின் தயவினால் பதவிகளில் இருப்பவர்களால் கூட கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
இது அமைச்சுப் பதவிக்கு நன்றி செலுத்தும் கோதாவில் பேசப்படுகின்றது. அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தானாக வெளியே வர வேண்டும் என்பது  அதிகமானோரின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பின் பின்னால் கபடத்தனம் மறைந்துள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புக்களின் பேரில் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அரசாங்கம் மறுநாள் சரிந்து விடும் என்று கனவு காணக்கூடாது.
அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யும் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அடையாளப்படுத்த அல்லது இனங்காட்ட வேண்டிய தேவை சிலருக்கு காணப்படுகின்றது. அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி முழு முஸ்லிம் சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ள சிலர் முயற்சிக்கின்றனர். 
இந்த கட்சி தானாகவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் நல்லது என்று அரசாங்கமும் சிந்திக்கின்றது. நாம் அரசாங்கத்துடன் அர்த்தபுஸ்டியுடன் வாதிடுவது புள்ளிபோட்டுக் கொள்ள அல்ல என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்வார் என்று நம்புகின்றோம்" என்றார். 


Post a Comment

0 Comments