எகிப்து காபந்து அரசின் பிரதமராக சீர்திருத்த ஆதரவு தலைவர் மொஹமட் அல்பரதியை நியமிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இராணுவ புரட்சிக்கு பின் எகிப்தின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அட்லி மன்சூர் பிரதமரை நியமிப்பதில் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டார்.முன்னதாக அல்பரதி பிரதமராக நியமிக்கப்படுவதாக
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஐ.நா. அணுக் கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவரான அல்பரதியை நியமிப்பதற்கு சலபிக்களின் நூர் கட்சி எதிர்ப்பு வெளியிட்டதோடு அவரை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தது.
ஜனநாயக முறையில் தேர்வான மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்து நான்கு தினங்கள் கழிந்துள்ள நிலையிலேயே பிரதமரை தேர்வு செய்வதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அல் பரதியின் நியமனத்திற்கு மொஹமட் முர்சியின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். அல் பரதியை மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிப்பவராக முர்சி ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.
‘இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் இன்று (சனிக்கிழமை) அல் பரதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதன்போது உத்தியோகபூர்வ நியமனங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை’ என ஜனாதிபதி ஆலோசகரை மேற்கோள் காட்டி ஏ. எப். பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. எனினும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு சாதகமான பெயர் பட்டியலில் முன்னணித் தெரிவாக அல்பரதி இருக்கிறார் என ஏ. எப். பி. கூறியுள்ளது.
இடைக்கால ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அல்பரதி மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்தனர். அல் பரதி மிதவாத மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியில் தலைவர்களுள் ஒருவராவார். இராணுவ புரட்சியை நியாயப்படுத்தி பி. பி. சிக்கு அளித்த பேட்டியில் ‘நாம் கரடு முரடான இடத்தில் சிக்கி இருந்தோம். அது வருத்தத்துக்கு உரியது. அவ்வாறான நிலை யாருக்கும் தேவைப்பட்டி ருக்கவில்லை’ என்றார்.
முன்னதாக அல்பரதி பிரதமராக நியமிக்கப்பட்ட செய்தி வெளியானதும் முர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்று திரண்டிருந்தோர் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர். எனினும் இரண்டாவது மிகப் பெரிய இஸ்லாமிய கட்சியான நூர் கட்சி இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அந்நூர் கட்சி இராணுவத்தின் திட்ட வரைபை ஏற்றபோதும் காபந்து அரசின் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டது. அல்பரதி பதவி ஏற்றால் ஆட்சி மாற்ற செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக அந்தக் கட்சி கூறியது.
எனினும் இராணுவப் புரட்சிக்கு பின்னர் எகிப்தில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது. பதவி கவிழ்க்கப்பட்ட முர்சி மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என கோரி ஆயிரக் கணக்கான அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை வரை இடம்பெற்ற வன்முறைகளில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 1000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். முர்சி மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்திலும் முர்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடு பூராகவும் இடம்பெற்றது.
0 Comments