Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முர்சி, இராணுவ ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இன்று

எகிப்து பதற்றம் உக்கிரம்

எகிப்து இராணுவத் தளபதி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவாளர்களும் இன்றைய தினத்தில் பாரிய ஆர்ப்பாட் டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது எகிப்தில் தொடரும் பதற்றத்தை மேலும் உக்கிரமடையச் செய்திருப்பதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பதாஹ் அல் சிசி கடந்த
புதன்கிழமை தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக நாட்டு மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தார். இந்த அழைப்புக்குப் பின்னரும் முர்சி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.
எனினும் எகிப்து இராணுவம் நேற்று தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப்படுத்தியதை அடுத்து தலைநகர் கெய்ரோ வான் பரப்பில் இராணுவ ஹெலிகொப்டர்கள் சுற்றியவண்ணம் இருந்ததாக அங்கிருப்போர் குறிப்பிட்டு ள்ளனர். இதில் கிஸா நகரில் இடம்பெற்ற முர்சி ஆதரவு பேரணிக்கு மேலால் ஹெலிகொப்டர் வட்டமிடும் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் போடப்பட்டுள்ளது.
நஸ்ர் நகரில் ஆயிரக் கணக்கான முர்சி ஆதரவாளர்கள் நேற்றைய தினத்திலும் கூடி, பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு அமர்த்துமாறு கோரினர். நஸ்ர் நகரின் ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு முன்னால் கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். அதேபோன்று அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு முன்னாலும் நேற்று முர்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த புதன்கிழமை இராணுவ வைபவம் ஒன்றில் பங்கேற்றபோதே அல் சிசி, இராணுவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவரது உரை எகிப்து அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
‘தீவிரவாதம் மற்றும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர எனக்கு அனுமதி வழங்கும் வகையில் அடுத்த வெள்ளிக்கிழமை (இன்று) கெளரவமுள்ள அனைத்து எகிப்து பிரஜைகளும் வீதியில் இறங்கி ஆதரவு தரவேண்டும்’ என்று அல் சிசி தனது உரையில் கோரியிருந்தார்.
இந்த உரையை தொடர்ந்தே எகிப்து இராணுவம் நாட்டில் தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப்படுத்தியது.
இந்நிலையில் இராணுவத் தளபதியின் அழைப்பை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரும் எதிரொலித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் புரட்சியை பாதுகாக்க அனைத்து மக்களும் வீதியில் இறங்க வேண்டும் என்று இடைக்கால ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் அஹ்மத் அல் மஸ்லமானி கூறினார்.
இராணுவத் தரப்பு மற்றும் முர்சி எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களை தீவிரவாதிகள் என குறிப்பிடுவது அண்மை காலத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளபதியின் அழைப்புக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உடன் பதிலளித்திருந்தது. அதில் ‘இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் பேரணி நடத்துவதை உங்களது எச்சரிக்கையால் தடுக்க முடியாது. நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து சதிவேலையையே தொடர்ந்து செய்து வருகிaர்கள்’ என்று அல் சிசிக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இஸாம் அல் எரியான் நேரடியாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியின் சட்டபூர்வ அதிகாரத்திற்காக போராட்டம் நடத்தும் முர்சி ஆதரவு தேசிய கூட்டணியும் இன்று வெள்ளிக் கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி உட்பட 11 அரசியல் கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணியின் அழைப்பில், கெய்ரோ பேரணியில் ஒன்றுதிரளுமாறு ஆதரவாளர்களை கோரியுள்ளது. எனினும் இன்றைய முர்சி ஆதரவு பேரணியின் மீது இராணுவத் தலைமைகள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது-
‘இராணுவத் தலைமையினால் முன்னெடுக்கப்பட்ட சதிப்புரட்சியை சர்வதேச சமூகம், ஐ. நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் நிராகரிக்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றத்தையே ஏற்படுத்தும்’ என்று முர்சி ஆதரவு கூட்டணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியின் அழைப்பு குறித்து சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவரில் ஒருவரும் முர்சி அரசில் அமைச்சராக இருந்தவருமான அம்ர் டர்ரக் வேல்ட் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘சிசி தனது தோல்வியை தவிர்க்க ஏனைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது கடைசி முயற்சியை கையாண்டிருக்கிறார். அது நாட்டை சிவில் யுத்தத்திற்குத்தான் இட்டுச் செல்லும். இது மிக அபாயகரமானது’ என எச்சரித்தார்.
இராணுவத் தளபதியின் ஆர்ப்பாட்ட அழைப்பை எகிப்தின் பிரதான அரசியல் குழுக்களான சலபிக்களின் நூர் கட்சி மற்றும் ஏப்ரல் 6 புரட்சியின் இளைஞர் முன்னணி ஆகியன நிராகரித்துள்ளன.
‘அணி திரள்வுக்கு எதிராக அணி திரள்வது சிவில் யுத்தத்திற்கே வழிவகுக்கும்’ என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கூட்டணியில் இருந்து பின் இராணுவ சதிப் புரட்சிக்கு ஆதரவளித்த அல் நூர் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
‘ஒரு அரசு சட்டத்தை மீறினால் அது தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6 இளைஞர் முன்னணியும் இதேபோன்ற அறிக்கையை வெளியிட் டுள்ளது. ‘பாதுகாப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் தனது பணியை நிறைவேற்ற மக்கள் ஆதரவு செயற்பாடு தேவையில்லை. இந்த தற்போதைய பதற்றத்தை மேலும் மோசமாக்கி நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்கே பாதகமாக அமையும்’ என அந்த முன்னணி எச்சரித்துள்ளது. இராணுவ தளபதியின் அழைப்பு குறித்து தாம் கடும் அவதானத்துடன் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘இந்த அழைப்பு மேலும் வன்முறையை அதிகரிக்க சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து நாம் அவதானமாக இருக்கிறோம்’ என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் ப்சஜி குறிப்பிட்டார்.
எனினும் இராணுவத்திற்கு ஆதரவான இன்றைய ஆர்ப்பாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப எகிப்தின் பல தனியார் தொலைக்காட்சிகளும் முன்வந்துள்ளன. 10 தனியார் தொலைக்காட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வழமையான ரமழான் நிகழ்ச்சிகளை நிறுத்தி இந்த பேரணியை நேரடியாக ஒளிபரப்பப் போவதாக கூறியுள்ளன.
எகிப்தின் பெரும் பாலான தனியார் தொலைக்காட்சிகள் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிராகவும் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அதனது தற்போதைய செயற்பாடு இந்த தொலைக்காட்சிகளை மேலும் தனிமைப்படுத்திவிடும் என கெய்ரோ விலிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனிடையே எகிப்து இராணுவம் தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப் படுத்தியுள்ளது. அதற்கு வீதிகளில் மேலதிக படைகளை குவிக்க அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை 3 ஆம் திகதி ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப் பட்டதைத் தொடர்ந்து இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments