எகிப்தில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அந்நாட்டு இராணுவத்துக்கு அமெரிக்கா நான்கு எப்-16 ரக யுத்த விமானங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்த்தது தொடர்பில் அமெரிக்க அரசு இன்னும் உறுதியான முடிவை எடுக்காத நிலையிலேயே புதிய இராணுவ உதவி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முர்சி அகற்றப்பட்டது இராணுவ சதிப் புரட்சி என வொஷிங்டன் ஏற்குமாயின்
, எகிப்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கும் பாரிய நிதியுதவியை நிறுத்த வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முர்சிக்கு ஜனாதிபதி பதவியை மீண்டும் வழங்கும்படி அழுத்தம் கொடுத்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடந்த திங்கட்கிழமை கெய்ரோவில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவ கட்டடத்திற்கு முன்னால் முர்சி ஆதரவாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
முர்சி எங்கே தடுத்து வைக்கப்பட்டிரு க்கிறார் என்பது குறித்து புதிய அரசு எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஈடுபாடு
நான்கு எப்-16 ரக யுத்த விமானங்கள் அடுத்தவாரம் எகிப்துக்கு வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எகிப்துக்கு 20 யுத்த விமானங்களை வழங்கும் ஒப்பந்தத்தின் கீழ் இந்த விமானங்கள் வழங்கப் படவுள்ளன. ஏற்கனவே 8 யுத்த விமானங்கள் கடந்த ஜனவரியில் எகிப்துக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய கடைசி எட்டு விமானங்களும் இந்த ஆண்டு இறுதியில் விநியோகிக்கப் படும் என நம்பப்படுகிறது.
“எகிப்து தொடர்பான எமது உதவித் திட்டத்தில் உடனடி மாற்றங்கள் கொண்டுவர தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு ஈடுபாடில்லை” என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜெய் கெர்னி கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
எனினும் அதிகாரத்தில் இருந்து முர்சி வெளியேற்றப்பட்டது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா எகிப்து இராணுவத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 1.3 பில்லியன் நிதியுதவியை வழங்கி வருகிறது.
எகிப்தில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அறிவிப்பில், அதனை இராணுவ சதிப் புரட்சி என்று அறிவிப்பதை அவர் அவதானத்தோடு தவிர்த்துக்கொண்டார். அவர் அவ்வாறு கூறியிருந்தால் எகிப்துக்கான நிதியுதவியை நிறுத்த சட்ட ரீதியாக செயற்பட வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். சட்டபூர்வமாக தேர்வாகும் அரசை இராணுவம் கவிழ்க்கும் பட்சத்தில், குறித்த நாட்டுக்கான அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் ரத்துச் செய்யப்படும் என அமெரிக்க சட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
சகோதரத்துவ அமைப்புக்கு அமைச்சு
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவி வழங்க இன்னும் சாதகமான வாய்ப்பு இருப்பதாக எகிப்தின் புதிய பிரதமர் ஹஸம் அல் பப்லாவி குறிப்பிட்டுள்ளார். ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு தொலைபேசி ஊடாக நேற்று அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
“அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து நான் கவனம் செலுத்தவில்லை. (முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்) சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியில் இருந்து அமைச்சுப் பதவிக்கு தகுதியான ஒருவர் பரிந்துரைக்கப்பட்டால், அவர் தகுதியாக இருந்தால் அது குறித்து நான் அவதானது செலுத்துவேன்” என்று பப்லாவி குறிப்பிட்டார்.
இதில் நாம் இடைக்கால அரசை அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். எனினும் புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து இன்னும் எவரையும் அனுகவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் புதிய பிரதமரின் அழைப்பை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்கனவே நிராகரித்திருந்தது.
இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை முர்சியை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அழுத்தம் கொடுக்க பாரிய ஆர்ப்பாட்டத்தை கெய்ரோவில் நடத்த முர்சி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்றுகூட ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் மொஹமத் பஅதியை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். பஅதி மீது எகிப்து வழக்குத் தொடுனர் அலுவலகம் நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதோடு, மேலும் பலரை கைது செய்ய பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. கெய்ரோ இராணுவ தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவத்தினர் எந்த அறிவுறுத்தலும் இன்றி ஆர்ப்பாட்டக்காரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கற்றம் சாட்டுகிறது. ஆனால் பாதுகாப்பு அரணை முறிக்க முயன்ற குண்டர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இராணுவம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கெய்ரோ நகரின் பல பகுதிகளிலும் கடந்த புதன்கிழமையும் முர்சி ஆதரவாளர்கள் பல பேரணிகளை நடத்தினர். இதில் கெய்ரோ நஸ்ர் மாவட்டத்திலுள்ள ரபா அத்வியா பள்ளிவாசலுக்கு வெளியில் 13 வது நாளாக நேற்றும் நூற்றுக்கணக்காக முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
0 Comments