எகிப்து காபந்து அரசின் பிரதமராக பொருளாதார நிபுணர் ஹஸன் அல் பப்லாவி நியமிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பதற்றம் நீடிக்கும் நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பையும் புதிய அமைச்சரவையில் இணையும் படி பப்லாவி அழைப்பு விடுத்துள்ளார். எனினும் இந்த அழைப்பை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சியான சலபிக்களின் நூர் கட்சிக்கும் புதிய அமைச்சரவையில் இணைய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
மறுபுறத்தில் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரின் தேர்தல் அட்டவணையை முர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஜனாதிபதியின் ஆணையை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புறக்கணித்திருந்தது.
இந்நிலையில் இந்த தேர்தல் அட்டவணையை வெளியிட முன் தம்மிடம் ஆலோசிக்கவில்லை எனக் கூறியே எதிர்த்தரப்புகள் அதனை நிராகரித்துள்ளன. முன்வைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணையில் பரிந்துரைக்கப்படும் எமது திருத்தங்களுக்கு அமைய புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று தேசிய மீட்பு முன்னணி கூறியுள்ளது.
ஆனால் இந்த தேர்தல் அட்டவணையை அவதானத்துடன் ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இடைக்கால அரசின் திட்டத்தை நாம் வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், “எகிப்து மக்கள் தீர்மானிக்கும் ஜனநாயக அரசை அமைக்கும் விபரம் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது” எனவும் விபரிக்கப்பட்டிருந்தது.
இடைக்கால ஜனாதிபதியின் தேர்தல் அட்டவணையில் 2014 ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என இடைக்கால ஜனாதிபதியின் பேச்சாளர் அஹ்மத் அல் முஸல்மானி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சி மற்றும் சலபிக்களின் நூர் கட்சிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த பரிந்துரையை இஸ்லாமிய மற்றும் தாராளவாத கட்சிகள் அனைத்தும் நிராகரித்துள்ளன. “முர்சி ஜனாதிபதியாக திரும்பும் வரை நாம் எந்த அமைச்சரவையிலும் பங்கேற்கப் போவதில்லை” என்று முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான மொஹமட் கமால் பி.பி.சிக்கு குறிப்பிட்டார்.
முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ புரட்சிக்கு ஆதரவளித்த நூர் கட்சி முர்சி ஆதரவாளர்கள் மீதான படுகொலை சம்பவத்திற்கு பின் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால ஜனாதிபதி பரிந்துரைத்த இரு பிரதமர்களையும் அந்த கட்சி நிராகரித்தது. இவர்கள் நடுநிலையாளர்கள் அல்ல என்று அந்த கட்சி குற்றம் சாட்டியது. எனினும் நூர் கட்சியினால் நிராகரிக்கப்பட்ட முன்னணி எதிர்க்கட்சி பிரமுகரான மொஹமட் அல் பரதி காபந்து அரசின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெளியுறவுக்கான துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முர்சியை வெளியேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட ஐ.நா. அணு கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவரான அல்பரதியை பிரதமராக நியமிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியானதை அடுத்தே அவர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் காபந்து அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் 76 வயதான பப்லாவி, தாராளவாத பொருளாதார நிபுணராவார். கெய்ரோ மற்றும் பாரிஸில் கல்வி கற்ற அவர் பொருளாதார துறையில் கலாநிதி பட்டம் பெற்றவராவார்.
அவர் கடந்த காலங்களில் அரச மற்றும் தனியார் துறைகளில் பல பதவிகளை வகித்துள்ளார். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்து இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இடைக்கால அரசின் சட்டபூர்வ அங்கீகாரத்தை பாதுகாப்பது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதில் ஆட்சி மாற்ற செயற்பாடுகளில் இடையூறு விளைவிப்போருக்கு பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு படைகளின் தளபதியுமான அப்தல் பத்தாஹ் அல் சிசி எச்சரிக்கை விடுத்தார்.
மறுபுறத்தில் முர்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் 650 சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் யார் விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பது தெளிவில்லாமல் உள்ளது. தமது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிடியாணை எதுவும் இன்றி கைது செய்யப்பட்டு வருவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.மறுபுறத்தில் முர்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
0 Comments