
சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் என்ற நோக்கில் சில நிறுவனங்களின் வேண்டுகோள்களைக் கவனத்திற்கொண்டே
2000ஆம் ஆண்டு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் அறுக்கப்பட்ட
கோழிகளை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ்
அவசியப்பட்டபோது அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகினர்.
அவர்களின் வேண்டுகோளை நன்நோக்கம் கொண்டு பார்த்த ஜம்இய்யா ஹலால் சான்றிதழ்
கொடுத்ததோடு அறுவை மேற்பார்வை செய்பவர்களை இரண்டு நிறுவனத்திலும்
நியமித்தது. ஏனெனில் கோழிகளை அறுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு
அவர்களால் அறுக்கப்படும் ஒவ்வொரு கோழியினதும் ஹலால் தன்மையை உறுதி செய்த
பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருக்கு குறித்த
நிறுவனங்கள் தந்துவந்த பணத்தையே ஊதியமாக கொடுத்து வந்தது.
ஹலால் சான்றிதழ் இரண்டே இரண்டு
நிறுவனங்களுக்கு மாத்திரம் ஆரம்பத்தில் இருந்து வந்தது. உள்நாட்டவர்கள்
மற்றும் வெளிநாட்டவர்களால் ஹலால் சான்றிதழின் நுகர்வுச் சந்தையில் ஏற்பட்ட
அதிகரிப்பும் வெளிநாட்டு ஏற்றுமதியின்போது ஏற்பட்ட ஹலால் சான்றிதழின்
அவசியமும் பல்வேறு உற்பத்தியாளர்களையும் ஹலால் சான்றிதழ் பெற தூண்டியது.
அவ்வாறு படிப்படியாக சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் இதுவரை 204 ஆகும்.
ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து
நிறுவனங்களும் எவருடைய வற்புறுத்தலுமின்றி அவர்களது சுய விருப்பின் பேரில்
தாமாகவே விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவையாகும். நாட்டில் அதிகரித்துவரும்
ஹலால் சான்றிதழின் அவசியத்தைக் கவனித்தே ஜம்இய்யா ஹலால் பிரிவு என்ற
தனியானதொரு பிரிவை உண்டாக்கியது. அதற்கென தனியாதொரு இடத்தை வாடகைக்குப்
பெற்று காரியாலய வசதிகளைச் செய்து, காரியாலயப் பணியாளர்கள், ஆய்வாளர்கள்,
உணவுப் பகுப்பாய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் என ஹலால்
சான்றிதழ் வழங்குவதோடு சம்பந்தப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முழு
நேரப்பணியாளர்களை வேலைக்கமர்த்தி இச்சேவையை மிகச் சிறப்பாக நாட்டுக்கு
வழங்கி வருகின்றது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை
மேற்கொள்வது சாதாரண விடயமல்ல. பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர
நிறைவேற்ற வேண்டியிருப்பதால் பல்வேறு செலவினங்கள் உள்ளன. உணவுப்
பகுப்பாய்வு நிபுணர்கள், ஹலால் கண்காணிப்பாளர்கள், ஹலால்
மேற்பார்வையாளர்கள், கணக்காளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான
ஊதியங்கள், கொடுப்பனவுகள், மற்றும் போக்குவரத்து, நிர்வாகம், தொடர்பாடல்,
நீர், மின்சாரம், காரியலயம் இயங்கும் கட்டிட வாடகை, சான்றிதழ் பெற்றுள்ள
தொழிற்சாலைகளைக் கண்காணித்தல் மற்றும் ஆய்வு கூடச் செலவுகள்,
போன்றவற்றுக்கு மாதமொன்றுக்கு ரூபாய் பதின் மூன்று இலட்சம்
தேவைப்படுகின்றது.
மேற்குறித்த செலவுகள் தவிர்ந்த வேறு
செலவுகளும் உள்ளன. சர்வதேச ஹலால் மாநாடுகளில் கலந்துகொள்ளல், உலமாக்கள்
மற்றும் துறைசார்ந்தவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளையும்
பொதுமக்களுக்கான விழிப்புக் கருத்தரங்குகளையும் நடாத்துதல், ஹலால்
சான்றிதழ் வழங்குவதில் சர்வதே ரீதியில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களோடு
புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடல் போன்றவிடயங்களுக்காக
அவ்வப்போது தேவைப்படும் செலவுகள் நலன்விரிம்பிகளிடமிருந்தே
பெறப்பட்டுவருகின்றன.
மேலே விவரிக்கப்பட்டது போன்ற ஏராளமான
செலவுகள் ஹலால் பிரிவுக்கு இருந்த போதிலும் முற்றிலும் இலாப நோக்கமின்றி
இயங்கும் ஒரு அமைப்பாகிய எமது அமைப்பு நுகர்வோருக்கோ, உற்பத்தியாளர்களுக்கோ
ஒரு சுமையாக ஆகாத விதத்தில் பின்வருமாறு தமது கட்டணக் கட்டமைப்பை
வடிவமைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


**ஹலால் சான்றிதழ் பெறும் உற்பத்திப்
பொருட்கள் நுறாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருந்தால் ரூபா இருபதாயிரம்
முதல் இருபத்தையாயிரம் வரை மாத்திரமே அறவிடப்படும்.
ஒரு கோழிப்பண்ணை மூலம் இருபதாயிரம் முதல்
நாற்பதாயிரத்துக்குட்பட்ட தொகை மாதாந்தம் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர்
தினமும் பதினைந்தாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரையிலான கோழிகளை அறுத்து
சந்தைப்படுத்துகின்றனர்.
அவ்வாறே மேற்கொடுக்கப்பட்டிருக்கும்
தகவல்களைக் கவனிக்கும்போது உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து எழுநூறு ரூபாய்
முதல் இருபத்தையாயிரம் ரூபாய் வரையிலான கட்டணங்கள் மாத்திரமே மாதாந்தக்
கட்டணமாக பெறப்படுகின்றன. ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழுக்காக கோழிப்
பண்ணைகளிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் தொகையையும் அப்பண்ணைகளால்
மாதாந்தம் சந்தைப்படுத்தப்படும் கோழிகளின் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது
ஒரு கோழியின் ஹலால் சான்றிதழுக்காக ஆறு சதம் மாத்திரமே பெறப்படுகின்றது.
ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ்
வழங்கும் சேவையைத் தொடர அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் ஜம்இய்யா மாதாந்தம்
அறிவிடும் முழுத் தொகை பதினைந்து இலட்சம் ரூபாய் மாத்திரமேயாகும்.
நிறுவனங்கள் ஹலால் சான்றிதழின் பயனாக
உள்ளுர், வெளியூர் சந்தையிலும் சுற்றுலா மூலமும் ஆதாயம் பெறுகின்றன.
இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது சதங்களை விட
குறைவானதே மேலும் ஹலால் சான்றிதழுக்காக நிறுவனங்கள் வழங்கும் சிறு தொகை
அவர்களின் வியாபாரத்தை விரித்தியடைய வைத்துள்ளதே அன்றி பொருட்களின் விலையை
அதிகரிக்கச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவானதொரு விடயமாகும். எனவே
முஸ்லிம்களோ முஸ்லிமல்லாதவர்களோ ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களுக்கு
ஏனைய பொருட்களைவிட அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்ற கூற்று மக்களை
பிழையாக வழிநடாத்தும் முயற்சியாகும்.
இதுவரை ஜம்இய்யாவின் ஹலால்
அத்தாட்சிப்படுத்தற் பிரிவினால் 204 நிறுவனங்களினூடாக சுமார் 4500
பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து
நிர்வனங்களிடமிருந்தும் மாதாந்தம் மொத்தமாக பெறப்படும் தொகை சராசரியாக
பதினைந்து இலட்சம் ரூபாயாகும். இதனுடைய அனைத்து கணக்கு முறைகளும் வருடாந்த
கணக்காய்வின் மூலம் உறுதிசெய்யப்படடிருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை இவ்வாறிருக்க ஜம்இய்யாவின் ஹலால்
சான்றிதழ் வழங்கும் பிரிவு மாதமொன்றுக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து 175000
ரூபாய் அறவிடுவதாகவும் இதனடிப்படையில் வருடத்துக்கு 700கோடி ரூபாய்
வருமானமீட்டி அல் காயிதா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு அனுப்புவதாகவும்
ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தின்
பின்னர் நிம்மதிப் பெருமூச்சு கண்டுள்ள நம் நாட்டில் இதன் மூலம் இனமோதல்கள்
தூண்டப்படுவதை சிந்திப்போர் உணர்வர். இதுபற்றி பொறுப்பு வாய்ந்தோர்
அவதானமாக இருப்பதே நாட்டின் அமைதிக்கு வழிகோலும்.
ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பில்
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக எமது அலுவலகத்திற்கு
நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை கண்டறியுமாறு தேசியப் புலனாய்வுப்
பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் தரப்பு ஆகியவற்றுக்கு
ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவு அழைப்புவிடுக்கின்றது.
மேலும் ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை
தொடர்பிலான உண்மைகைளைக் கட்டறிந்து நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதன்
மூலம் தப்பெண்ணெங்கள் களையப்படல் வேண்டும். இதற்கு அரசும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளும் ஆவண செய்தல் வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் ஹலால் பிரிவு வேண்டிக்கொள்கின்றது.
எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் விடயங்களை பொதுமக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றது.
.ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம்
வருடமொன்றுக்கு 700 கோடி ரூபாய் அறவிடுவதாகவும் அப்பணம் பயங்கரவாத
அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களை
நிரூபிக்குமாறு வேண்டுகிறோம்.
·ஹலால் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களைப்பற்றி தெளிவுகளைப்பெற எம்மைத் தொடர்ப்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
· இது இரகசியமானதொன்றல்ல எனக்
கூறிக்கொள்வதோடு எவரும் முறையாக எமது காரியாலயத்திற்கு வந்து இது
சம்பந்தமான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
·இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களின் மூலம் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை விளைவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
0 Comments