
எகிப்தின் அரசியலமைப்பு நீதிமன்றத்தை ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு, அரசியல் அமைப்பு குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்திய நிலையிலேயே நீதிபதிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.நாடு பூராகவும் உள்ள நீதிபதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்
எகிப்தின் நீதிபதிகள் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், தமது கழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடாது என அறிவித்துள்ளது.
எகிப்து அரசியலமைப்புக்கான உச்ச நீதிமன்றத்திற்கு முன்னால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அன்றைய பணிகளை முன்னெடுக்க நீதிபதிகளால் முடியாமல் போனது. எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை தயாரித்த 100 பேர் கொண்ட அரசியலமைப்பு குழு சட்ட ரீதியானதா என்பது குறித்து அன்றைய தினத்தில் தீர்ப்பு அளிக்கப்படவிருந்த நிலையிலேயே ஜனாதிபதி ஆதரவாளர்கள் நீதிமன்றத்தை முற்றுகை இட்டனர்.
“எமது நீதிபதிகள் மீது உளவியல் ரீதியில் தாக்குதல் அளிக்கும் முறைக்கு நீதிமன்றத்தின் பதிவாளர்கள் தமது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது.” என்று இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அரசியலமைப்பு குழு குறித்து நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கவிருந்த தீர்ப்பும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி அண்மையில் அறிவித்த சர்ச்சைக்குரிய ஆணையில் அரசியல் அமைப்புக் குழுவை நீதித்துறையால் கலைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் அரசியல் அமைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பு நேரடியாக ஜனாதிபதிக்கு சவாலாக அமையும்.
எகிப்து பாராளுமன்றத்தின் மேல் சபை உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புக் குழு கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றிய புதிய அரசியலமைப்பின் பிரதி கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அரசியல் அமைப்பின் மீது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார். எனினும் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே எதிர்ப்பாளர்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் அமைப்பு வரைவு பற்றி ஒரு தேசிய ஒருமைப்பாட்டை பெறும் முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி தனது வாக்குறுதியை மீறியிருப்பதாக எதிர்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
“தமது பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத முறையற்ற அரசியலமைப்பொன்றுக்கு பொறுப்பற்ற முறையில் சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பதற்கு தேசிய மீட்பு முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது” என அந்த முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளை மீறுவதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எகிப்தின் தற்போதைய சூழல் ஜனாதிபதி முர்சி மற்றும் அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆதரவாளர்களுக்கும் நாட்டின் பிரதான மதச் சார்பற்ற அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் நீதித்துறைக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
-thinakaran-
0 Comments