உயிரிழப்பு
52 ஆக உயர்வு
இஸ்ரேல் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் நேற்று வான் மற்றும் கடல் வழியாக காசா மீது
உக்கிர தாக்குதலை நடத்தியது.காசாவில் இருக்கும் இரு ஊடக கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி அலுவலகம் உட்பட பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி மற்றும் ஐ.டி. என். அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன. இதன்போது
பல ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளனர்.
மறுபுறத்தில் காசாவில் இருந்து நேற்றைய தினத்திற்குள் 8 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது எறியப்பட்டுள்ளதோடு அதில் மூன்று ரொக்கெட்டுகள் இஸ்ரேலை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் இருந்துவரும் ரொக்கெட்டுகளை நிறுத்த அங்கு இன்னும் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது தாக்கவேண்டியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவில் நான்காவது நாளாக ரொக்கெட் விழுவதற்கான அச்சுறுத்தலாக சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.டெல் அவிவ் மீது இரு ரொக்கெட்டுகள் எறியப்பட்டதாகவும் அவை இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் இடை மறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இஸ்ரேல் இராணுவம் 'டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட தகவலில், பல மாதங்களாக ஆய்வு நடத்தப்பட்ட உளவுத் தகவலின் உதவியுடனேயே நேற்று முன்தினம் காசா இலக்குகள் மீது தாக்கியதாக கூறியுள்ளது. ஆனால் பலஸ்தீன மருத்துவ தகவலின் படி இஸ்ரேலிய வான் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஊடகவியலாளர் தங்கியிருந்த கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவத்திடம் மத்திய கிழக்கிற்கான வெளிநாட்டு ஊடக அமைப்பு காரணம் கேட்டுள்ளது. எனினும் மேற்படி கட்டிடங்களின் மேலிருக்கும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. இந்த சமிக்ஞை கருவிகள் மூலம் ஹமாஸ் களத்தில் உள்ள தமது படைகளுடன் தொடர்பு கொள்வதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளபதி அஹமத் ஜபரி மீதான தாக்குலுடன் தீவிரமடைந்த இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலில் இதுவரையில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானோர் அப்பாவி பொது மக்களாவர். கடந்த வியாழக்கிழமை காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை தொடக்கம் காசா வானில் இஸ்ரேல் யுத்த விமானங்கள் பறந்து அந்த பகுதி எங்கும் ஷெல் தாக்குதல்களை நடத்தும் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் கூறியுள்ளார். சரியான இலக்கை தாக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ள ஆல்டிலரிகளும் காசா பகுதியில் விழும் சத்தங்கள் கேட்பதாக அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஹமாஸ் அமைப்பின் அல் குத்ஸ் தொலைக்காட்சியின் ஊடக வலையமைப்பு இருக்கும் கட்டடத்திலேயே பி.பி.சி. தொலைக்காட்சியின் காசா கிளை மற்றும் ஸ்கை தொலைக்காட்சி மற்றும் ஐ.டி.என். ஆகிய ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த கட்டடத்திற்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து கட்டடம் பாரிய சேதத்திற்கு உட்பட்டுள்ளதோடு அங்கிருந்து ஊடகவியலாளர்களும் அகற்றப்பட்டுள்ளனர்.
0 Comments