கொலன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு சிரியாவில் இருந்து மோட்டார்
குண்டுகள் விழுந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், சிரியா மீது எச்சரிக்கை ஏவுகணை தாக்குதலை
நடத்தியுள்ளது.
கடந்த 1973 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல், சிரியா மீது
தாக்குதல் நடத்துவது இது முதல் முறையாகும்.
ஏற்கனவே சிரியாவில் தொடரும் அரச
எதிர்ப்பு போராட்டம் அயல் நாடுகளான துருக்கி, லெபனான் எல்லைகளிலும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலும் இதில் தலையிட்டுள்ளது.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கொலன் ஹைட்ஸ் பகுதியில் அண்மையில் இஸ்ரேல் இராணுவ
வாகனம் ஒன்றின் மீது சிரியாவிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து
இஸ்ரேல் துருப்புகள் எல்லைப் பகுதியில் உஷார்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து
இஸ்ரேல் இது குறித்து ஐ.நா.விடம் முறையிட்டது.
இந்நிலையில் சிரியாவில் இருந்து மீண்டும் மோட்டார் குண்டுகள் இஸ்ரேல் இராணுவ
முகாமில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இஸ்ரேல் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்
முதல் முறையாக சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இது எச்சரிக்கை
தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இதன் போது இஸ்ரேல், சிரியா மீது ஒரே ஒரு தமூஸ் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலை
நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ தரப்பு கூறியுள்ளது. இந்த ஏவுகணை இலக்குகளை தெளிவாக
தாக்கக்கூடியது. ஆனால் தாம் இலக்கு எதனையும் தாக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம்
கூறியுள்ளது.
சிரியாவில் இடம்பெறும் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில்
இஸ்ரேல் பகுதிக்குள் தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் தாக்குவதோடு மோட்டார்
குண்டுகளும் விழுந்து வருகின்றன. இவ்வாறு சிரிய படை நடத்திய எறிகணை தாக்குதல்
தவறுதலாக இஸ்ரேல் எல்லை வேலியை தாண்டி யூதக் குடியிருப்பு பகுதி ஒன்றில்
விழுந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனிமேலும் எல்லை தாண்டி தாக்குதல்கள் இடம்பெற்றால் இஸ்ரேல் அமைதியாக
இருக்காது என ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு
எச்சரித்துள்ளார். “எமது சிரிய எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என கூர்மையாக
அவதானித்து வருகிறோம். எதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்” என கடந்த
ஞாயிற்றுக்கிழமை கூடிய இஸ்ரேலிய வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் நெதன்யாகு கூறினார்.
ஏற்கனவே சிரியா - இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட காலமாக யுத்த சூழல் நீடித்து வருகிறது.
இரு நாட்டு எல்லையில் ஐ.நா. படை யுத்த சூன்ய பகுதியை கடைப்பிடித்து வருகிறது.
துருக்கி எல்லையில்
ஏவுகணை தளம்
மறுபுறத்தில் சிரியாவின் துருக்கி எல்லையிலும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம்
நீடிக்கிறது. அண்மையில் சிரியாவின் எறிகணை தாக்குதலால் துருக்கி கிராமத்தைச்
சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துருக்கி, சிரியா மீது தொடர்ச்சியான
தாக்குதல்களை நடத்தியது.
அத்துடன் சிரியாவைத் தாக்குவதற்கு துருக்கி பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டது.
இந்நிலையில் சிரிய எல்லையில் துருக்கி இராணுவத்தை பலப்படுத்தி தீவிரமாக கண்காணித்து
வருகிறது. அத்துடன் எல்லைப் பகுதியில் நேட்டோ ஏவுகணைத் தளத்தை அமைப்பது குறித்து
துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த தகவலை துருக்கி ஜனாதிபதி அப்துல்லா
குல் தெரிவித்தார். சிரியாவின் எந்த வகையான அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாத்துக்
கொள்ள எமக்கு முழு உரிமை உள்ளது. இதனால் எல்லையில் அமெரிக்க பெட்ரொயிட் ஏவுகணைத்
தளத்தை நிறுவுவது குறித்து நேட்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குல் கூறினார்.
எனினும் துருக்கி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் சிரிய இராணுவம்
கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின் வடகிழக்கு
பகுதியில் இருந்து முன்னேறி வரும் கிளர்ச்சியாளர்கள் துருக்கி எல்லைப் பகுதியில்
இருக்கும் ராஸ் அல் அயின் பகுதியை கடந்த சனிக்கிழமை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து
நேற்று முன்தினம் சிரிய இராணுவம் ராஸ் அல் அயின் மீது ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல்
நடத்தியதோடு பீரங்கி தாக்குதலையும் நடத்தியது.
லெபனானிலும் பதற்றம்
அதேபோன்று சிரியாவின் மற்றுமொரு அயல் நாடான லெபனானில் சிரிய மோதலை ஓட்டி பதற்றம்
நீடித்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் மூவர்
கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயமடைந்தனர்.
தெற்கு லெபனான் கரையோர நகரான சிடோனில் இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. லெபனானின் ஷியா
பிரிவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா வுக்கும் சலபி பிரிவு தலைவரான ஷெய்க் அஹமத் அஸிர்
ஆதரவாளர் களுக்கும் இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் சலபி பிரிவு தலைவரான அஹமத்
அஸிர் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு ஆதரவளிப்பதற்கு கடும்
கண்டனம் வெளியிட்டுள்ளதோடு சிடோன் பகுதியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின்
சுவரொட்டிகளை கிழித்தெறியும்படி தமது ஆதரவாளர்களை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்தே
இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அதனை ஒட்டி
லெபனானிலும் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகிறது. அண்மையில் பஷர் அல் அஸாத்திற்கு
எதிராக செயற்பட்டு வந்த லெபனான் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் தொடரும் வன்முறைகளில் இதுவரை 37,000 க்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டிருப்பதாக சிரியா தொடர்பில் கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்புகள்
கூறியுள்ளன.
0 Comments