Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வெல்லப் போவது யார்?...



 (றவூப் ஸெய்ன்)
உலக வல்லரசின் அடுத்த தலைவர் யார் என்பதைத்தீர் மானிக்கும் தேர்தல் அமெரிக்க மாநிலங்களில் சூடுபிடித்துள்ளது. ஒபாமா-ரொம்னி ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற முழு முயற்சிசெய்து வருகின்றனர். அமெரிக்காவில் செயல்படும் மிகப் பெரிய யூத லொபியான AIPAC ஒபாமாவையா? ரொம்னியையா ஆதரிப்பது என்ற தடுமாற்றத்தில் உள்ளது.
அமெரிக்காவின் யூத ஊடகங்களும் அரசியல் நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பீடுகளின்படி, இம்முறை ஒபாமாவின் யூத வாக்குகள் 64% ஆகக் குறையும் என்று
எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2008 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா 78% யூத வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யூதர்களின் 29% ஆன வாக்குகள் இம்முறை ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடும் ரொம்னிக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலை ஆதரிக்கும் வேட்பாளரே அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறலாம் எனும் நிலை கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கின்றது. இதை இந்தத் தேர்தலிலும் புறக்கணிக்க முடியாது என்பதையே இரு வேட்பாளர்களினதும் நகர்வுகள் காட்டுகின்றன.
ரொம்னி, சமீபத்தில் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஒபாமா இஸ்ரேலுக்கு அளித்துவரும் ஆதரவு போதுமானதாக இல்லை எனவும், இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவியைத் தான் பன்மடங்காக அதிகரிக்கவுள்ளதாகவும் சூளுரைத்தார்.
அமெரிக்காவில் மொத்தமாக 5 மில்லியன் யூதர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேலுக்குச் சார்பான பிரச்சார முயற்சிகளை மேற்கொள்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர்கள் மத்தியில் செயற்படும் மிகப்பெரும் நிறுவனம் ஐபெக்தான். அதன் முன்னணித் தலைவர்களான ஹொவார்ட் பேர்மன், செனட்டர் பர்பரா பொக்ஸர், ரிச்சட் ஸ்ரோன் ஆகியோர் முன்னிலையில் ஒபாமா கைச்சாத்திட்ட இஸ்ரேலுக்கான மேலதிக 70 மில்லியன் டொலர் இராணுவ உதவித் தொகையானது ஒபாமாவின் பக்கமே யூதர்களின் வாக்குகளை அள்ளி வீசும் என அவதானிகள் கருதுகின்றனர்.
காஸாவிலிருந்து ஏவப்படும் ரொக்கெட்களை இடை மறித்துத் தாக்கும் எதிர்-ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு இஸ்ரேல் இந்நிதியை கையாளவுள்ளதாக ஹொவார்ட் பேர்மன் அங்கு குறிப்பிட்டார். இஸ்ரேல் பிரதமர் நெடன்யாஹு அமெரிக்காவின் இவ்வுதவித் திட்டத்தை Iron Dome என வர்ணித்துள்ளார். பலஸ்தீனர்களிடமிருந்து இஸ்ரேலின் யூதர்களைப் பாதுகாக்கும் கேடயம் என்று அவர் அதற்கு அர்த்தம் வழங்கியுள்ளார்.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒபாமா, "இது இஸ்ரேலுக்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணம்" என்று தெரிவித்தார்.
மாநில அடிப்படையில் நோக்கும்போது, ஒபாமாவுக்கான யூதர்களின் வாக்குகளில் சற்று வீழ்ச்சி ஏற்படுகின்றபோதும், பெரும்பாலும் வெள்ளை மாளிகையின் அதிகார பீடத்திற்கு ஒபாமா இரண்டாவது முறையும் தெரிவாவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
ஆயினும், யூதர்களின் வாக்கு களைத் தவிர்த்து நோக்கும்போது அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு கணிசமான அளவு குறைந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மத்திய தர வர்க்கத்தை பொருளாதார ரீதியில் உயர்த்தி விட்டால், ஒபாமா வெற்றி பெறுவது நூறு வீதம் நிச்சயமாகி விடும். ஆனால், தேர்தலுக்கு முன்னர் அது குதிரைக் கொம்பு.
வோல் ஸ்ட்ரீட்டில் ஒபாமா நிருவாகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மக்களின் அதிருப்தி அலைகளை துல்லியமாகவே பிரதிபலிக்கின்றன.
அமெரிக்காவின் கடந்த நான்கு ஆண்டு காலம் பின்னடைவின் ஆண்டுகளாகவே கருதப்படுகின்றன. பொருளாதாரம், இராணுவம், அரசியல் ஸ்திரம், தொழிற்துறை ஆகிய பல்வேறு தளங்களில் இப்பின்னடைவு நிகழ்ந் துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் வல்லரசு எனும் நிலையிலிருந்து அமெரிக்காவை மொத்த மாகவே பின் தள்ளிவிடக் கூடிய நிலமை உருவாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 6% ஆக இருந்த வேலையற்றோர் பிரச்சினை 8% ஆக உயர்ந்துள்ளது. அதனது உடனடி விளைவே வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்கள். வேலையற்றோர் வீதம் அதிகரித்திருப்பது வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மைக்கான மற்றொரு குறிகாட்டியாகும்.
அமெரிக்க மக்களில் ஒரு வீதத்தினர் அந்நாட்டின் பொருளாதாரத்தில் 80% ஆனவற்றை அனுபவிக்கின்றனர். 99% மான மக்கள் வெறும் 20% பொருளாதாரத்தையே கொண்டுள்ளனர். 2 ஆம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் லிபரல் பொருளாதாரக் கொள்கையை வரிந்து கட்டிக் கொண்ட அமெரிக்காவின் பொருளாதாரம் இத்தகைய பாரிய இடை வெளியை உருவாக்கியுள்ளது.
300 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்வளவு பாரிய பொருளாதார இடைவெளி ஏற்பட்டிருப்பது தற்போதைய நெருக்கடிகளுக்குப் பின்னணியாக உள்ளது. உலக ஏற்றுமதிப் பொருளாதாரத்திலும் சீனா அமெரிக்காவை முந்திவிட்டது. இவ்வாறான நிலமைகள் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், 50 இலட்சம் யூதர்களும் அங்கு செயல்படும் சியோனிஸ ஆதரவு ஊடகங்களுமே அமெரிக்கத் தலைவர்களை தீர்மானிக்கின்றன. இத்தேர்தலில் ஒபாமா பல பில்லியன் டொலர்களைப் பிரச்சாரத்திற்காக அள்ளி வீசி வருகின்றார். இத்தகைய பாரிய பிரச்சார செலவினங்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் படும் சியோனிஸ வர்த்தகப் புள்ளிகள்தான் ஏற்றிருக்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகால இடை வெளியில், இஸ்ரேல் விரும்புகின்றவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து வந்துள்ளனர். அதன் நலன்களுக்கு எதிரானவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோ தெல்லாம், அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில், சியோனிஸத்தின் புதிய தலைவராக ஒபாமா மீண்டும் ஒருமுறை வெள்ளை மாளிகையில் வீற்றிருக்கலாம். ஆனால், அவர் அங்கு கழிக்க இருக்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க வல்லரசுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இப்போதே நாம் ஊகிக்கலாம்.
அமெரிக்க உள்ளூர் பள்ளிக் கூடமொன்றுக்கு சமீபத்தில் வருகை தந்த ஒபாமா, அங்கிருந்த மாணவர்களை நோக்கி, "பொருளாதாரத்தில் நாம் சீனாவைப் போன்று வேகமாக முன்னேற வேண்டும்" என்று கூறியிருப்பது நமது வாதத்திற்கு சிறு உதாரணம் மட்டுமே.
அமெரிக்கத் தேர்தலோ அதன் மூலம் தெரிவாகும் தலைவர்களோ அதன் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்என்ற கோஷத்தோடு 2008 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார்.
ஆனால், அவரது மாற்றத்தில் இப்போது உலக மக்களுக்கு துளியளவேனும் நம்பிக்கையில்லை என்பதை உலகின் நடப்பு விவகாரங்கள் காட்டி நிற்கின்றன. அமெரிக்கத் தேர்தலும் மீண்டும் ஒரு முறை அதைத்தான் நிரூபிக்கப் போகின்றது.

கடவுளின் கீழ் நாட்டை ஆளும் ஒரு ஜனாதிபதியே தற்போதைய அமெரிக்கர்களின் தேவை
வேர்ஜினியா மாநிலத்தில் பிரபலமான பாதிரி ஒருவருடன் பிரச்சார மேடையில் தோன்றிய மிட்ரொம்னி, தாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் எனவும், தனது வெற்றிக்கு அவர் துணை நிற்பார் எனவும் தெரிவித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பைபிளின் சில வாசகங்களை பாராயணம் செய்த நிலையில், ரொம்னியின் இக்கருத்து வெளி வந்தது. தான் கடவுளை மறக்கப் போவதில்லை. கடவுள் என் நெஞ்சில் வாழ்கின்றார் எனக் குறிப்பிட்ட ரொம்னி, கடவுளின் கீழ் நாட்டை ஆளும் ஒரு ஜனாதிபதியே தற்போதைய அமெரிக்கர்களின் தேவை என்றும் குறிப்பிட்டார்.
தன்னைத் தீவிர மதவாதி போன்று ரொம்னி காட்டிக் கொள்வதன் உள்நோக்கம் எதுவென்று தெளிவாகவில்லை என அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடைக்கால கிறிஸ்தவ தேவாலயங்களின் அதிகார பீடங்களையே ரொம்னி கனவு காண்கிறார் என வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை எழுதியுள்ளது. காரணம், மனித உரிமைகளை அரசாங்கங்கள் வழங்குவதில்லை, கடவுளே அதனை வழங்குகின்றார் எனவும் ரொம்னி அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, யூத தேவாலயங்களுக்குச் சென்று யூதர்களின் மத வழிபாடுகளில் ஒபாமா பகிரங்கமாக ஈடுபட்டு வருவதும் ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் குதித்துள்ள இரு பிரதான வேட்பாளர்களும் தீவிர இறை பக்தி கொண்டவர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments