Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

“நபியே நீர் மகத்தான பண்புடையவராக இருக்கிறீர் என அல்லாஹ் கூறுகிறான்” - ஜனாதிபதி முர்ஸி ஐ.நா. பொதுச் சபையில் தெரிவிப்பு..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். சாந்தியும் சமாதானமும் நாம் நேசிக்கின்ற, பின்பற்றி வருகின்ற அகிலங்களின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக. அவரை மதிப்பவர்களை நாம் விரும்புகிறோம். அவர்களுக்கு வார்த்தையாலோ, செயலாலோ தீங்கிளைக்க முயல்பவர்களை நாம் கடுமையாக எதிர்ப்போம்.
நபியே நீர் மகத்தான பண்புடையவராக இருக்கிறீர் என்று அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து அல்குர்ஆனில் கூறியுள்ளான். உலகத்தாருக்கு அருட்கொடையாகவன்றி உம்மை நாம் அனுப்பவில்லை என்றும் அல்லாஹ் கூறியிருக்கிறான். அப்படியான இறுதி இறைத் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என ஜ.நா பொதுச் சபையில் மாநாட்டில் தனது
உரையை ஆரம்பித்து பேசிய எகிப்தின் ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், மகத்தான சாத்வீகப் புரட்சியைத் தொடர்ந்து மக்களின் அங்கீகாரத்துடன் தெரிவு செய்யப்பட்ட முதலாவது சிவில் ஜனாதிபதியாக நான் இங்கு வந்திருக்கிறேன். எகிப்தியர்கள் ஒவ்வொருவரும் இன்று பெரும் நம்பிக்கையை உணர்கின்றனர்.

நவீன தேசம் ஒன்றை உருவாக்கும் எகிப்து மக்களுடைய ஆசையை நிறைவேற்றும் முனைப்புடன் பல்வேறு எட்டுக்களை நாம் வைத்திருக்கிறோம். அந்த நவீன தேசம் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும். எகிப்து மக்களுடைய உணர்வுகளில் ஆழ வேரூன்றிப் போயுள்ள பெறுமானங்களில் அது குறைவு செய்யாது. நீதி, சத்தியம், சுதந்திரம், கண்ணியம், சமூக நீதி என்பவற்றை கட்டியெழுப்பும் தேசமாக அது இருக்கும்.

முழு உலகமும் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செலவழித்து நீதியின் அடிப்படையில் தீர்க்க வேண்டிய முதன்மை விவகாரமாக பலஸ்தீன விவகாரம் இருக்கிறது. தமது உரிமைகளை மீளப்பெறும் உறுதியோடு பலஸ்தீன மக்கள் மிக நீண்ட காலப்பகுதியை கழித்திருக்கிறார்கள்.

தமக்கான தனியான நாடொன்றை கட்டியெழுப்ப வேண்டும். அதன் தலைநகராக குத்ஸ் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு அவர்கள் இருந்து வருகின்றனர்.

தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலான அனைத்து வழிமுறைகளையும் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட அவர்களது எதிர்பார்ப்புக்களை இன்று வரை நிறைவேற்றிக் கொள்ள முடியாத பெரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

சர்வதேச நாடுகள் இன்றிலிருந்து பலஸ்தீனத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பையும் குடியேற்றங்களையும் நிறுத்துவதற்கு மிக வேகமாக செயற்பட வேண்டும்.

பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டும் வகையிலான சுதந்திர பலஸ்தீன நாட்டை ஏற்படுத்தித் தரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஐ.நா. சபையிலே பலஸ்தீன் தொடர்பாக முன்வைக்கப்படும் எல்லாத் தீர்மானங்களுக்கும் எகிப்தின் உதவி இருக்கும் என்பதை நான் இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அதில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அழைக்கிறேன்.

முழு உலகையும் கண்ணீர் வடிக்கச் செய்கின்ற பெரும் பிரச்சினையாக சிரியாவில் இடம்பெறும் மனிதப் பேரவவலம் காணப்படுகிறது. எங்களது முதல் வேலையாக இருப்பது உடனடியாக அங்கு இடம்பெறும் மனித பேரவலத்தை நிறுத்துவதுதான்.

சிரிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு நாம் பல்வேறு எட்டுக்களை எடுத்து வைத்திருக்கிறோம். அந்தப் பணி தொடர்ந்தும் நடைபெறும். நாம் அனைவரும் அங்கு நடைபெறும் பிரச்சினைக்கு பொறுப்பாளிகள். அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களுக்கு முன்னால் வாயில் திறந்திருக்கிறது. நாம் எல்லோரும் அதில் நேரிடையாக பங்களிக்க வேண்டும்.

இந்த உம்மத்தின் அந்தஸ்த்தை உலகில் நிலைநிறுத்துவற்காக எல்லா சகோதர அறபு நாடுகளுடனும் இணைந்து எகிப்து உழைக்கும். அத்துடன், இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காகவும் எகிப்து பாடுபடும்.

சூடானிலே இருக்கின்ற எமது சகோதரர்கள் முன்பைவிட மிக அதிகமான உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். இந்நாடு ஸ்திரதன்மைக்காகவும் அபிவிருத்தியை அடைவதற்காகவும் பெரும் முனைப்புடன் செயற்படுகிறது.

தென் சூடானுடன் ஆரோக்கியமான உறவுகளை கட்டியெழுப்ப அது உழைத்து வருகிறது. சூடான் சமாதானத்திற்காக அளப்பெரிய தியாகங்களை செய்திருக்கிறது. அதற்காக முழுமையான சமாதான உடன்படிக்கைகளைக் கடைபிடித்திருக்கிறது.

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியில் சகோதர நாடான சோமாலிய மக்கள் ஹஸன் ஷெய்ஹ் மஹ்மூத் தலைமையில் செயற்படுகின்றன. ஐ.நா. சபை அவர்களது முயற்சிக்கு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்விடத்தில் அவசியம் வேண்டிக் கொள்ளும் விடயம் ஐ.நா. சபை பெண்களினதும், இளைஞர்களினதும் விவகாரங்களில் உதவிபுரியும் நோக்கில் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் காணப்படுகின்ற பல்வேறு சவால்களை உரையாடல் மூலமும், பரஸ்பர புரிந்துணர்வோடும், ஒத்துழைப்போடும், சர்வதேச சட்டங்களை மதித்து ஐ.நா. சபை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எதிர்காலத்தை நான் பெரும் நம்பிக்கையோடு பார்க்கிறேன். நாம் அழைப்பு விடுக்கும் சமாதானம் முழு உலகமும் பரவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த சமாதானம் நீதியின் மேல் எழவேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரினது உரிமைகளை அது முழுமையாக வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். யாரையும் அது பிரித்துப் பார்க்காது என நம்புகிறேன். நாமெல்லாம் பரஸ்பரம் ஒத்துழைப்போடு செயற்பட்டால் சமாதானத்தை அடைந்து விடலாம். நாம் எல்லாம் சமமானவர்கள்.

தூய எண்ணத்தோடு நாங்கள் உழைக்கின்ற பொழுது நாம் கஷ்டங்கள் எதிர்நோக்குவோம்ள என்று நான் நினைக்கவில்லை. எங்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு இவ்வுலகிற்கு மிகச் சிறந்த எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதே.
உங்கள் அனைவருக்கும் நன்றி, வஸ்ஸலாம்


Post a Comment

0 Comments