Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முதல் போட்டியில் இலங்கை - சிம்பாப்வே


4வது ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 7ம் திகதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. அவை தரவரிசை அடிப்படையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டம் பெற்றது. 2009 ஆம் ஆண்டு நடந்த 2வது உலக கோப்பையில் பாகிஸ்தானும், 2010 ஆம் ஆண்டு நடந்த 3வது உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்தும் சம்பியன் பட்டம் பெற்றன.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் முடிவின் தரவரிசைப்படி அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் வருமாறு:
‘ஏ’ பிரிவு : இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ‘பி’ பிரிவு : அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு, அயர்லாந்து
‘சி’ பிரிவு : இலங்கை, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே
‘டி’ பிரிவு : பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ்
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சுப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறும். 25 ஆம் திகதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. இதன் முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த 8 அணிகளும் ‘சூப்பர் 8’ சுற்று முடிவின்படி இரண்டு பிரிவில் இருந்து முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். எந்த அணி உலக கிண்ணத்தை வெல்லும் என்று கணிக்க இயலாத அளவுக்கு இருக்கிறது.
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் வலுவானதாக உள்ளன. இதேபோல நடப்பு சம்பியனான இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதீவு அணிகளும் சிறப்பாக ஆடக்கூடியன. அவுஸ்திரேலியா சமீபகாலமாக மோசமாக ஆடினாலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி போட்டியில் பெற்ற வெற்றியால் அந்த அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இதேபோல் நியூசிலாந்து அணியிலும் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே போன்ற அணிகளும் முன்னணி அணிகளுக்கு சவாலாக விளங்கக் கூடியவை. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள இலங்கை சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறும்.

Post a Comment

0 Comments