Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரையை இரத்து செய்யப்பட்டுள்ளது


கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றவிருந்த உரையை இறுதி நேரத்தில் அரசாங்கம் இரத்து செய்திருக்கும் பின்னணியிலேயே சபாநாயகரின் இந்த கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 22ஆம் திகதி ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

2016ஆம் ஆண்டிற்குப் பின் பாகிஸ்தான் அரச உயர்மட்ட பிரதிநிதி ஸ்ரீலங்காவுக்கு வருகின்ற முக்கிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இம்ரான் கான், எதிர்வரும் 24ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் பாகிஸ்தான் பிரதமரது நாடாளுமன்ற உரை இரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, பாகிஸ்தான் பிரதமரின் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கான விஜயத்தின் நிகழ்ச்சித்திட்டத்தை இரத்து செய்யுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய கொரோனா அச்சுறுத்தலுன் கூடிய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லையெனவும் சபாநாயகர் கூறியுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தன.

இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்காவின் நட்பு நாடுகளில் முதன்மையான சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தி தனது அரசியலை முன்னெடுக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு இவ்வாறான தர்மசங்கட நிலையை உருவாக்கி அவமானத்தை உண்டாக்கியுள்ள இந்த செயற்பாடானது, இலங்கை அரசாங்க ராஜதந்திர போக்கின் தொய்வு நிலையை காட்டுகிறது என்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனநாயக வலிமை, நீதி, நியாயத்தை வலியுறுத்தல் உட்பட ஸ்ரீலங்காவின் பல்லின மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசி அரசாங்கத்துக்கு வேண்டுகோளை முன்வைப்பார் என சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை பரவியிருந்த நிலையிலையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் குறித்து எடுத்துள்ள இரண்டாம் கட்ட முடிவுகளை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமரின் ஸ்ரீலங்காவிற்கான விஜயம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டில் பதிவு செய்யப்படாத அனைத்து மத்ரஸா கல்லூரிகளை சீல் வைப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸா விவகாரத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தீர்மானத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இருப்பதால் அதனை மாற்றுவதற்கான பேச்சினை பாகிஸ்தான் பிரதமர் நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே புதிய முயற்சியொன்றுக்கு அமைச்சர் சரத் வீரசேகர தயாராகி வருகின்றார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ibc-itm-

Post a Comment

0 Comments