Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை - மெல்கம் கர்தினால்


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லையெனில் நியாயத்தை பெற்றுக் கொள்ள சர்வதேசத்தை நாடவும் தயாராகவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியானவையாக இல்லை. எனவே மக்களுடன் இணைந்து வேறு வழியில் இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , அந்த நடவடிக்கை என்னவென்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதியை எமக்கும் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,

அறிக்கை கிடைக்குமானால் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து எமது நிலைப்பாடுகளை தெரிவிப்போம் எனவும் அல்லது அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எந்த வகையிலும் இலங்கையில் நியாயம் வழங்கப்படவில்லை என்றால் சர்வதேசத்தை நாடவும் தயாரகவுள்ளோம். எனினும் அவ்வாறான நடவடிக்கை எடுப்பதற்கான தேவையை அரசாங்கம் ஏற்படுத்தாது என நம்புவதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.

தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மீது மாத்திரமின்றி , தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதல்களை தடுக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் அதனை செய்யத் தவறியவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் எனவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக நாம் எடுக்கும் நடவடிக்கை நீதிமன்றத்தினூடாக எடுக்கப்படுவதாகவே இருக்கும் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

இதேவேளை போதகர்கள் என கூறி போலி பிரசாரங்களை செய்வதோடு , துன்பத்திலிருக்கும் மக்களின் கவலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத குழுவினர் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments