Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முர்சி ஆதரவு, எதிர்ப்பாளர்களுக்கு இடையில் மோதல்:9 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவின் பல பகுதிகளிலும் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதோடு 65 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இதில் முர்சி எதிர்ப்பாளர்கள் முகாமிட்டிருக்கும் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு கல்யூப் நகரில்
இடம்பெற்ற மோதலில் மேலும் மூவர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தவிர நேற்று முன்தினம் இரவு கெய்ரோ பல்கலைக்கழகம் மற்றும் சலாஹ் சலம் பகுதிகளில் இடம்பெற்ற முர்சி ஆதரவு பேரணியின் போதும் மோதல்கள் வெடித்துள்ளன.
கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு அருகில் முர்சி ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மீது அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் நடத்திய தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். கற்கள், வேட்டைத் துப்பாக்கிகளை பயன்படுத்தி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு கூட்டத்தை கலைத்துள்ளனர்.
சலாஹ் சலம் வீதியிலும் முர்சி ஆதரவு பேரணி மீது இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக எகிப்து இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்ஸ¥ர் 1952 ஜுலை 23 புரட்சி ஆண்டு வைபவத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தினார். வன்மம், குரோதம், பிளவு இல்லாத எகிப்தின் பக்கத்தை திருப்ப வேண்டிய தருணம் வந்துவிட்டதாக எனக் கூறினார். அதில் எகிப்து இராணுவத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறவே இடைக்கால ஜனாதிபதி தனது உரையின் பெரும்பங்கை எடுத்துக்கொண்டார்.
கல்யூப்பில் இடம்பெற்ற வன்முறையில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதோடு மற்றுமொருவர் மோதலில் இருந்து தப்பியோடிய போது ரயிலில் மோதி பலியாகியுள்ளார். திங்கள் இரவு இடம்பெற்ற வன்முறைகளில் 43 பேர் காயமடைந்தனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கெய்ரோவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற முர்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து திரும்பும் போது தஹ்ரிர் சதுக்க வாயிலில் வைத்து முர்சி எதிர்ப்பாளர்களை சந்தித்துள்ளனர். இதனையடுத்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் தாக்குதல்களின் போது பாதுகாப்பு தரப்பினர் முர்சி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் இராணுவத்தினர் சிவில் உடையில் வந்து தாக்குதல் நடத்துவதாகவும் முர்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“பொலிஸார் எம்முடன் இருக்கிறார்கள். அந்த பாசிசவாதிகள் மீண்டும் எம்மை தாக்கினார்கள். எனது இறைவன் அவர்களுக்கு தண்டனை வழங்குவான்” என்று முகம் மற்றும் கைகளில் வெட்டுக்காயத்திற்கு உள்ளான முர்சி எதிர்ப்பாளரான 22 வயது சமிர் ஹபிஸ் குறிப்பிட்டார். இதில் தஹ்ரிர் சதுக்கத்தை முர்சி ஆதரவாளர்கள் ஆக்கிரமிக்க முயன்றதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். மோதல்கள் தணிந்தபின் தஹ்ரிர் சதுக்கத்திற்கு திரும்பிய எதிர்ப்பாளர்கள் “நாம் சதுக்கத்தை பாதுகாத்தோம்” என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியை தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரைக் கொண்ட முர்சி ஆதரவாளர்கள் நாளாந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த திங்கட்கிழமை குறைந்தது 12 நகரங்களில் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

Post a Comment

0 Comments