அச்சமடையத் தேவையில்லை

இலங்கையில் தரக்குறைவான சமையல் எரிவாயு எதுவும் விநியோகிக்கப்படவில்லை எனவும் உரிய தரத்திலான சமையல் எரிவாயுவே சந்தையில் உள்ளதால் மக்கள் அது குறித்து அச்சமடையத் தேவையில்லை என இலங்கையில் உள்ள பிரதான சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியது.தரம் குறைந்த சமையல் எரிவாயு தருவிக்கப்பட்டு
சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஐ. தே. க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம். பி. குற்றஞ்சாட்டியுள்ளார். தரம் குறைந்த எரிவாயு அடங்கிய கப்பலொன்று அண்மையில் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வினவியதற்கு பதிலளித்த லிட்ரோ கேஸ் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாஸ குடாபாலகே கப்பலில் ஏற்றப்பட முன்னரும் இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட பின்னரும் தருவிக்கப்படும் சமையல் எரிவாயு பரீட்சிக்கப்படும்.
கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை நாம் இலங்கையில் பரீட்சித்த போது, ஒரு கொள்கலனில் உரிய தரம் இருக்கவில்லை. எனினும் அவை இலங்கை சந்தையில் பயன்படுத்தக்கூடிய சர்வதேச தரத்தில் இருந்தாலும் முழு கப்பலையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தோம். குறித்த கம்பனி அந்த சமையல் எரிவாயுவை இலங்கை சந்தையில் விற்க முயன்றாலும் அது பயனளிக்காமல் திரும்பிச் சென்றது. பாகிஸ்தானில் குறித்த கப்பல் சமையல் எரிவாயு தொகையை இறக்கியுள்ளது.
ஆனால் இது தொடர்பில் தவறான பிரசாரம் இங்கு பரப்பப்பட்டுள்ளது. எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்ட போதும் எம்மிடம் 10 நாட்களுக்கு போதிய சமையல் எரிவாயு கையிருப்பில் இருந்தது. விநியோகஸ்தர்களிடமும் 3 நாட்களுக்கு போதிய கையிருப்பு காணப்பட்டது. தினமும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சிலிண்டர் சமையல் எரிவாயு நாடு பூராகவும் விற்பனையாகிறது. தவறான வதந்தியால் 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சிலிண்டர்கள் வரை விற்கப்பட்டன.
சிலர் மேலதிகமாக சிலிண்டர்களை சேமிக்க முயன்றதால் சந்தையில் ஓரளவு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் தரம் குறைந்த சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இரு சமையல் எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. அவை உரிய தரத்தில் இருந்தன. மற்றொரு கப்பல் 7ம் திகதி வரவுள்ளது. சந்தையில் உள்ள சமையல் எரிவாயுவால் எந்த பாதிப்பும் எழாது. மக்கள் எதுவித அச் சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.