எகிப்து ஜனாதிபதி இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட விவகாரம் சர்வதேச அவதானத்தை செலுத்தியுள்ளது. எனினும் எகிப்து விரைவில் ஜனநாயகத் திற்குத் திரும்ப வேண்டும் என பல சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுத்துள்ளன.கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் முர்சி அகற்றப்பட்டதற்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம்
எகிப்து சுயாதீனமான ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
“அனைத்து தரப்புகளும் வெகு விரைவில் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் திரும்ப வேண்டும். இதில் சுயாதீனமான முறையில் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் கத்தரின் ஆஷ்டன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
மறுபுறத்தில் எகிப்து மக்களுக்கு அமைதிகாக்குமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரியுள்ளார். “எகிப்தியர் தமது எதிர்ப்பை வெளியிடும் உரிமையை ஆர்ப்பாட்டம் மூலம் வெளியிடப்பட்டது. ஆனால் எந்த அரச செயலிலும் இராணுவம் தலையிடுவது அவதானத்திற்குரியது. ஜனநாயக முறையிலான சிவில் அரசு உடன் அமைக்கப்பட வேண்டும்” என்று பான் கீ மூனின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் முர்சியை வெளியேற்றிய இராணுவத்தின் முடிவு அவதானத்திற்கு உரியது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். “முடியுமான விரைவில் சிவில் அரசு அமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி முர்சி அவரது ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்” என்று ஒபாமா வலியுறுத்தி யுள்ளார்.
அரபு உலகில், எகிப்தின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அரசியலமைப்புக்கான உச்ச நீதிமன்றத்தின் தலைவர் அட்லி மன்சூருக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “வரலாற்றில் சிக்கலான தருணத்தில் எகிப்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருப்பவருக்கு சவூதி மக்கள் சார்பில் எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதர எகிப்து மக்களுக்காக உங்களுக்கு வழங்கப்பட்டி ருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற இறைவனை பிரார்த்திக்கி றேன்” என்று சவூதி மன்னர் கூறியுள்ளார்.
மறுபுறத்தில் முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பை ஆட்சியிலிருந்து வெளியேற்றி யதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் வாழ்த்தை தெரிவித்துள்ளது. “எகிப்து மக்களின் காவலன் என்பதை எகிப்து இராணுவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதன் முலம் நாட்டின் சட்டம் மற்றும் நிர்வாகம் அனைத்தும் எகிப்து சகோதரர்களையும் பாதுகாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் சைத் அல் நஹ்யான் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. எகிப்தின் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்து மற்றும் துனீஷியாவில் ஆட்சிக்கு வந்தது குறித்து ஐக்கிய அரபு இராச்சியம் கவலையடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உள்நாட்டு யுத்தத்தைச் சந்தித்திருக்கும் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அறிவிப்பில் முர்சியின் வெளியேற்றமானது. ‘இஸ்லாமிய அரசியலுக்கு’ என கூறியுள்ளார். எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பொய்யை உணர்ந்துவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார். சிரிய அரச பத்திரிகையான அல் தவ்ராவுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் முன்னணி உறுப்பினர் யஹ்யா மூஸா கூறும் போது, “ஹமாஸ் அமைப்பு எகிப்து விவகாரத்தில் தலையிடாது. முர்சியை வெளியேற்றிய இராணுவத்தின் முடிவு குறித்து கருத்து வெளியிட முடியாது” என்றார்.

0 Comments